திண்டுக்கல்: பாலியல் சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வனத் துறை மற்றும் வேளாண்துறை இணைந்து விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம். விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மாசற்ற மாநிலமாக உணர்ச்சிகள் இல்லாத மாநிலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு நச்சும் தாக்காத வண்ணம் சிறந்த மாநிலமாக திகழும். தமிழ்நாட்டில் நல்ல குடிநீர், நல்ல காற்று கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பாலியல் விவகாரத்தில், அந்த கல்லூரி தாளாளர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு உள்ளது. பாலியல் சம்பவத்தை யார் செய் திருந்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை பாயும். மேலும், அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் .
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாத வாறு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் மாணவி கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ? அந்தக் கோரிக்கையை கண்டிப்பாக தமிழக அரசு ஏற்று உரிய முறையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, தமிழக வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இங்குள்ள யானைகளை வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவதா, அல்லது மாற்று வழி செய்வதா என்பது குறித்து முடிவு செய்வார் என்றார்.