அழுகிப் போனதால்.. அழவைத்த மாம்பழ வியாபாரம்..
கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு பழ மார்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தினமும் 3000 வரையிலான சிறு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் 12 நாட்கள் தீவிர ஊரடங்கின் விளைவாக வாகனப்போக்குவரத்திற்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே அதில் முன்றில் ஒரு பங்கு வியாபாரிகள் கூட வராததால் வியாபாரமாகாத பழங்களைத் தேக்கி வைத்ததில் இவை அனைத்தும் அழுகி வீணாகி விட்டதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் மொத்த வியாபாரிகள்.
“டிரக்ல ஒரு ஆள் தான் வரணுங்கிறாங்க. டிரை சைக்கிள் மாதிரியான சின்ன வண்டிகள் மட்டுமே அனுமதிக்கிறாங்க. இதனால யாருமே பொருள் வாங்க வரதேயில்ல. நாங்களும் எவ்ளோ பழங்களை தான் பாதுகாத்து வைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்புங்கிறதால எல்லா சப்போட்டா, பைனாப்பிள், பப்பாளினு எல்லா பழங்களும் வீணாகிப்போய் 20 டன் வரைக்கும் ரோட்ல தான் கொட்டினோம்” என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
“இந்த மாதவரம் மார்கெட் ஆரம்பிச்ச நாளிலருந்து இது தான் பழங்கள் இவ்ளோ அதிகமாக வீணாகி போனதில் முதல் தடவை. ஆந்திராலருந்து வரும் மொசாம்பி மாதிரியான பழங்களில் 50% கெட்டுப்போய் தூக்கித் தான் வீசினோம். இதனால பெரிய அளவில் நஷடம் ஆகிடுச்சு” என்று வருந்துகிறார் பழ வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன்.
அதே நேரம் திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகள் என்பதால் ஓரளவு தாக்குப்பிடித்து கிட்டத்தட்ட 2500 டன்கள் வரையிலான சனியன்று மிச்சமானவற்றைத் திங்கள்கிழமையன்று விற்க முடிந்ததாகக் காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் சந்திரன் தெரிவிக்கிறார்.
– லெட்சுமி பிரியா