சென்னை: அரசு பேருந்தில் பயணிக்கும்போது, சக பெண் பயணிகளை, ஆண் பயணிகள் முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பேருந்துகள் சரியான நேரத்தில் சரியான முறையில் இயக்கப்படுவது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல பள்ளி நேரங்களில், அலுவலக  நேரங்களில் போதுமான பேருந்துகளும் இயக்குவது கிடையாது. இதனால், கிடைக்கும் பேருந்துகளில் பொதுமக்கள், ஆண், பெண் பேதமின்றி நெருக்கியடித்துக் கொண்டும், படிகளில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். இதுபோன்ற நிலைதான் இன்றுவரை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பேருந்து பயணத்தின்போது பெண் பயணிகளை, ஆண் பயணிகள் முறைத்து பார்க்கக்கூடாது என தமிழக அரசு வினோதமான உத்தரவை போட்டு உள்ளது. இதற்காக  மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்களை, ஆண் பயணிகள் முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக துன்பப்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், புகைப்படம் எடுத்தல் போன்றவற்றை செய்யக்கூடாது என்றும் குறிப்பாக அவர்கள் எந்த செயலும் சக பெண் பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் ஆண் பயணிகளை நடத்துனர் எச்சரித்த பின், அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் என்றும், வழியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடத்துனரும் பெண் பயணிகளுக்கு உதவி செய்யும் போது, அவர்களை தவறான நோக்கத்தில் தொடக்கூடாது என்றும், அவர்களிடம் பொருத்தமற்ற, தேவையற்ற கேள்விகளை  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட  விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் வாகனத்தில் புகார் புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் அதனை கேட்கும் போது அதனை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசின் இந்த உத்தரவு கேலிக்குரியதாக உள்ளது. முதலில் பயணிகளுக்கு தேவையான பேருந்துகளை விடுங்கள் என்று பலரும், பெண்களுக்கு தனி பேருந்து போல ஆண்களக்கு தனி பேருந்து, தம்பதியினருக்கு தனிப்பேருந்து என பேருந்துகளை விட்டுவிட்டு, தமிழகஅரசு இதுபோன்ற உத்தரவை போடலாம்  என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.

மேலும் பலர், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அனைத்து வகையான உரிமைகளும் வழங்கப்பட்டு வரும் நிகழ் காலத்தில், பிற்போக்குத்தனமாக  தமிழகஅரசு பெண்களை முறைக்கக்கூடாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.