விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி என்னும் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுத்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ப்பட்டியலினத்தவர் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.
மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களைக் கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்று மாற்றுச் சமூகத்தினர் கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்குச் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.