சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி வழங்கி இருப்பது, தமிழக விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான கர்நாடக அரசின் வழக்கு இன்று (நவம்பர் 13, 2025) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகச் சில தகவல்கள் வெளியாகின.
காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு அணையை மேகதாதுவில் அமைக்க கர்நாடக அரசு சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்து, 2018-ஆம் ஆண்டு மத்திய நீர்வளக் குழுமத்திடம் சமர்ப்பித்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்பின், 2020-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கான (EIA) அனுமதி பெற கர்நாடக அரசு முயன்றபோதும், தமிழ்நாடு அரசு அதனைத் தடுக்க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து வெற்றி பெற்றது.
அதற்கிடையில், கர்நாடக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததும், தமிழ்நாடு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இதையடுத்து, 2022 மார்ச் 21-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக மேகதாது திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை 2022 மார்ச் 31 மற்றும் மே 26 தேதிகளில் நேரில் சந்தித்து, இந்த திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இதன்பின், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசின் திட்டத்தை விவாதப் பட்டியலில் சேர்க்க முயன்றபோது, அதற்கு அதிகாரமில்லை என வாதித்து தமிழ்நாடு அரசு 2022 ஜூன் 7 அன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக, 2024 பிப்ரவரி 9 அன்று, தமிழ்நாடு அரசின் முயற்சியின் பலனாக, மத்திய நீர்வளக் குழுமம் மேகதாது திட்ட அறிக்கையை திருப்பியனுப்பியது. இது தமிழகத்திற்கு ஒரு பெரிய வெற்றியாகும் என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், கர்நாடக முதலமைச்சர் சமீபத்தில் கூறியுள்ள மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை” என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும், வறட்சி ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை கர்நாடகா வழங்காமல் வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும், அது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (13-11-2025) உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் மத்திய நீர்வளக் குழுமமும், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை கேட்ட பிறகே எந்த முடிவும் எடுக்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், மேகதாது அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்பதையும் அமைச்சர் விளக்கமளித்தார்.
திராவிட மாடல் அரசு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்த முயற்சியையும் தமிழ்நாடு அரசு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும்,” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகள் விவரம்:
2018: 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடகா சமர்ப்பித்ததை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
2020: சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான ஒப்புதலை கர்நாடகா பெற முயன்றபோது, தமிழக அரசு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்து அதைத் தடுத்து நிறுத்தியது.
2022: கர்நாடக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டபோது, தமிழக சட்டமன்றப் பேரவையில் 21-3-2022 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமரிடம் வலியுறுத்தல்: முதலமைச்சர், 31-3-2022 மற்றும் 26-5-2022 அன்று பிரதமரைச் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
பெரிய வெற்றி: தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகதாது அணை பற்றிய கருத்துருவை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது.
“மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளைப் பாதிப்பதோடு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.