ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.   பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாஜக 80 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதில் 75 பேர் கிறிஸ்தவர்கள். காங்கிரஸும் வழக்கம் போல இதே பார்முலாவைத்தான் கடைபிடித்து களத்தில் உள்ளது.

இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள

மேகாலயா சட்டமன்ற தேர்தல்:

மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக, காங்கிரஸ் உள்பட மொத்தங்ம  369  பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களில் 36 பேர் பெண்கள். மேகாலயாவில், 10.99 லட்சம் பெண்கள் மற்றும் 10.68 லட்சம் ஆண்கள் உட்பட 21 லட்சத்துக்கும் அதிகமான (21,75,236) வாக்காளர்கள் வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பார்கள். இவர்களில் 81ஆயிரம் பேர் முதல் வாக்காளர்கள்.

மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளில் 3,419 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தியாவின்  ஸ்காட்லாந்து என புகழ் பெற்ற மாநிலம் மேகாலயா. இம்மாநிலத்தில் மாநில கட்சியான என்.பி.பி பாஜக மற்றும் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. கடந்த 2018 தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. இம்முறை என்.பி.பி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 60 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டுமின்றி, இந்தமுறை மம்தாவின் திரிணாமுல் கட்சியும் களமிறங்கி உள்ளது. இதனால் கடும் போட்டி நிலவுகிறது. ஏனென்றால், கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு மமதாவின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதனால் மேகாலயா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாகிவிட்டது.

இந்த முறை மேகாலாயாவில் மாநில கட்சிகளுடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் சரிக்கு சமமாக மல்லுக்கட்டுகிறது. வெல்லப்போவது யார்?

நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்: 

நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரையில் என்.டி.பி.பி. பிரதான கட்சியாக இருந்து வருகிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்த கட்சி. 2018-ம் ஆண்டு தேர்தலில் 18 இடங்களில் என்டிபிபி வென்றது. 12 இடங்களில் வென்ற பாஜகவுன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பின்னர் எதிர்க்கட்சியான என்.பி.பி.யும் ஆட்சியில் இணைந்தது. நாட்டிலேயே எதிர்க்கட்சி இல்லாத ஒரு சட்டசபையாக நாகாலாந்து இருந்தது.

,இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 20; கூட்டணி கட்சியான என்டிபிபி 40; காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன. லோக் ஜன்சக்தி 15, என்.பி.பி.- தேசியவாத காங்கிரஸ் தலா 12 இடங்கள் சிபிஐ 9, ஐக்கிய ஜனதா தள் 7, ஆர்ஜேடி 3 இடங்களில் போட்டியிடுகிறது.

மேகலாயா, நாகாலாந்து இரு மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் பாஜக வேட்பாளர்களில் பெரும்பாலோர்  கிறிஸ்தவர்ககளாகவே உள்ளனர்.

நாகாலாந்து மாநில தேர்தலில் மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 4 பேர் மட்டுமே பெண்கள். நாகாலாந்து மாநிலத்தில் இதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒரு தேர்தலில் கூட பெண் எம்.எல்.ஏ. சட்டசபைக்குள் நுழைந்ததும் இல்லை. நாகாலாந்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,17,632 . இவர்களில் ஆண்கள் 6,61,489. பெண்கள் 6,56,143.