சென்னை: நாளை தமிழகம் முழுவதும் 1லட்சம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். 2வது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ளும்படி அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும் சில வடமாநிலங்களில் தொற்று பரவல் நீடித்து வருகிறது. இதனால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஜூன் மாதம் கொரோனா  4வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும், 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், 2-வது தடவை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது.

இதன்காரணமாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வகையில்,  நாளை மாநிலம் முழுவதும்  1லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன், இந்த தடுப்பூசி மெகா முகாம், காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது என்றும், எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றார்.

மேலும், இந்த தடுப்பூசி முகாமில்,  2 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்,  தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் வந்து ஊசி போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு  கூறினார்.