ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நேற்று நடைபெற்றது.
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
157 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லானிங் அதிக முறை ஐசிசி உலகக்கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.
2014, 2018, 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளிலும் 2022 ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை போட்டி என மொத்தம் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் நான்கு முறை ஐசிசி உலக கோப்பை வென்றுள்ளார். இந்தியாவின் தோனி மூன்றுமுறை கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.