மதுரை: புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில்  பட்டாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவில் தக்காரான அமைச்சர் பிடிஆரின் தாயார், செங்கோலை பெற்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், நேற்று (வெள்ளிக்கிழமை) விமர்சையாக நடைபெற்றது. பட்டாபிஷேகம் நடைபெற்ற நாள் தொடங்கி ஆடி மாதம் வரை, நான்கு மாதங்கள் மதுரையில் அன்னை மீனாட்சியின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.

பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருமலைநாயக்கர் வழங்கிய செங்கோல் அம்மனுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, தீபாராதனைக் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட ராயர் கிரீடம் சாற்றப்பட்டு, செங்கோல் வழங்கப்பட்டது.

இந்த செங்கோலை,  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், அமைச்சர் பி.டி.ஆரின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன், செங்கோலை பெற்று பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ருக்மணியுடன் அமைச்சர் பிடிஆர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக செங்கோல் பெறும் நடைமுறைகளை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை தொடர்ந்து செங்கோல் அறங்காவலரிடம் வழங்கப்பட்டது.

மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவது ஐதீகம்.