அசிடிட்டி-க்கான ஆன்டாசிட் மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற எச்சரிக்கை அச்சிடப்பட்ட வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளும் புரோட்டான் பம்ப் தடுப்பான்கள் எனும் ஆன்டாசிட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாண்டாபரசோல், ஓமிபரசோல், டோம்பரசோல், லான்சபரசோல், எசோம்பரசோல் உள்ளிட்ட மருந்துகள் மீது இந்த எச்சரிக்கை அச்சிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில் நெஞ்செரிச்சல், வாயு கோளாறு, செரிமான கோளாறு ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்படும் இந்த ஆன்டாசிட் மருந்துகளை நீண்ட நாட்கள் உட்கொள்ளுவதன் பக்கவிளைவாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வகையான மருந்து மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது இருந்தபோதும் இதனால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் குறித்து மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இனி இந்த மருந்துகள் மீது “சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அச்சிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.