கோழிக்கோடு, கேரளா
நிபா வைரஸ் பாதிப்பை குணப்படுக்கு மருந்து உள்ளதாக கேரள ஓமியோபதி மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் சுமார் 16 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடெங்கும் இந்த வைரஸ் குறித்த அச்சம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவி உள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் சில நோயாளிகள் இந்த வைரசால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதி கேரள மாநில ஓமியோபதி மருத்துவர் சங்கத் தலைவர் உன்னிகிருஷ்ணன் “ஓமியோபதி மருத்துவ முறையில் அனைத்து வகை வைரஸ் காய்ச்சலுக்கும் மருந்துகள் உள்ளன. அவ்வகையில் நிபா வைரசால் தாக்கப்பட்டோருக்கும் மருந்துகள் உள்ளன. நாங்கள் எங்கள் மருந்துகளை நிபா வைரசால் தாக்கப்பட்டோருக்கு அளிக்க மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேரள மாநில சுகாதாரத் துறை செயலர் ராஜிவ் சதானந்தன், “ஓமியோபதி மருத்துவத் துறை எனது நேரடி கண்காணிப்பிலுள்ளது. இதுவரை அந்த துறையில் இருந்து யாரும் இது குறித்து எனக்கு தகவல் அளிக்கவில்லை. இது போல மருந்து உள்ளதாக நான் கேள்விப்பட்டது கூட கிடையாது” என தெரிவித்துள்ளார்.