பிராணாயாமம் என்பது மனித உடலில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியே விடும் ஒரு சுவாசப்பயிற்சியே. சுவாசமானது தங்கு தடையின்று உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சென்றடைய உன்னத பயிற்சியாகும்
பிராணன் என்பது காற்றின் கலவை. பஞ்சபூதத்தில் ஒன்றான பூதமாகும். இது நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமை யாதது. இதை சித்தர்கள் பிராணன் என்று அழைப்பார்கள். பிராணன் என்பது காற்று வெளி , மூச்சுக்காற்று, சுவாசக்காற்று, வளி, நாடி, வாசி, வாய்வு என பல பெயர்களில் அழைக்கின்றார்கள்
18 சித்தர்களில் ஒருவரான திருமூலரின் பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக காற்றைப்பற்றியும், உடம்பை வசப்படுத்துவது பற்றியும் திருமூலரின் திருமந்திரம் மிக முக்கியமான தகவல்களை கொண்டுள்ளது
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே
– திருமந்திரம்
ரேசகம் – உள் வாங்குதல்
பூரகம் – வெளி விடுதல்
கும்பகம் – உள்ளே நிறுத்துதல் போன்றவை பிராணாயமத்தின் முக்கிய செயல்களாகும்
மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் என்ற நூல் விளக்குகிறது.
பிராணாயாமமானது அஷ்டாங்க யோகத்தில் பதஞ்சலி மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது , அஷ்டமா சித்துக்களை அடைவதற்கும், இயற்கை சட்டத்தினை உணர்ந்து நடத்துவதற்கும் வழி வகை செய்கிறது
சுவாசக் கணக்கு
திருமூலர் தமது திருமந்திரத்தில் ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு 21,600 (24ழ15ழ60) சுவாசங்களை உள்வாங்கி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை அங்குலக் கணக்கில் அக்காலத்தில் வழக்கம். வலது நாசித் துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழிமுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றது.
மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை மேற்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.
வலது நாசியில் சுவாசிக்கும்போது சூரிய கலை, பின் கலை, தந்தை கலை, வட கலை என்று பெயர் சொல்வார்கள். இடது நாசியில் சுவாசிக்கும்போது சந்திரகலை, தாய் கலை, இட கலை,
சுழி முனை
இரு நாசிகளுக்கும் சமமாக ஓடும் சுவாச முறையாகும். இக்கலையில்தான் சித்தர்கள் அதிக நேரம் இருப்பார்கள். இறை சிந்தனை, தியானம் போன்றவை இக்கலையில் சிறந்தது – இதை அலி நாடி,நடு நாடி என்றும் கூறுவார்கள்
சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம் உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் வாழ முடியும் என்பது சித்தர்களின் கணக்காக இருக்கின்றது
பிராணாயாமத்தின் வகைகள்
1.நாடி சுத்தி
2.கும்பகம்
3.உஜ்ஜயி பிராணாயாமம்
4.சிட்டாலி
5.சித்தகாரி பிராணாயாமம்
6.கபாலபதி
பிராணாயாமம் செய்ய உகந்த நேரம்
விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரை செய்யலாம், மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை செய்யலாம்
வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு
பிராணாயாம ஆசனங்கள்
சித்தாசனம்
பத்மாசனம்
வஜ்ராசனம்
மேற்கண்ட ஆசனங்களை ஏதோ ஒரு ஆசனத்தில் அமர்ந்து மெதுவாக ஒரு நாசியின் வழியாக பிராண வாயுவை உள்ளிழுத்து மாற்றொரு நாசியின் வழியாக மெதுவாக வெளியிடுவது பிராணாயமத்தின் ஒரு வகை (நாடிசுத்தி) இதை முறையாக குருவின் வழியாக பயிலலாம். யூடியூபில் காணொளியில் இருந்தாலும் முறையாக குருவின் வழியாக செய்வது சிறப்பு
பயன்கள்
மூளை மற்றும் உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றது, கண்ணொளி பெறுகின்றது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. உடல் வலி குறைகிறது. நியாபக சக்தி அதிகரிக்கிறது. சுவாச மண்டலம் சீரடைகிறது. தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. உடலில் உள்ள சுரப்பிகளை சீர்செய்கிறது. வாய் உமிழ் நீர் சுரத்தலை சரி செய்கிறது
நுரையீரல் , சுவாசக்குழாய் , ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களையும் குணப்படுத்துகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. மன உளைச்சல், படபடப்பு, மனச்சோர்வு இவைகளை சீர் செய்கிறது மற்றும் ஆன்மீகப்பயிற்சிக்கான தியானத்திற்கு வழி வகை செய்கிறது.
மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS.,PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002