டெல்லி: உக்ரைன் ரிட்டன்  மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் உயர்படிப்பு மற்றும் மருத்துவம் படித்துவந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பினர். அவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், உக்ரைனில் எந்தவித தேர்வுமின்றி, பணம் கொடுத்து, கல்லூரிகளில் சேர்ந்து, படிப்பதால், அவர்கள் இந்திய கல்லுஹரிகளில் சேர் முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என  இந்திய ரஷிய தூதர் அறிவித்தார். அதுபோல, இந்திய வெளியுறவுத்துறையும்,  அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு விசாரணையின்போது, மத்தியஅரசு, தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்தியஅரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என தெரிவித்து உள்ளது. மேலும்,  இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது என்றும், வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருவோரை இந்திய கல்லூரிகளுக்கு மாற்ற தேசிய மருத்துவ ஆணையமும் அனுமதி தரவில்லை, எனவே மாணவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க முடியாது என கூறி உள்ளது.

இந்திய அரசின் இந்த தகவல் உக்ரைன் ரிட்டன் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபாவில் உறுப்பினர் எம்.பி., பினாய் விஸ்வம்  கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பவார் , மத்தியஅரசின்  நிலைப்பாட்டை  தெளிவுபடுத்தினார்.  உக்ரைனில் இருந்து நடுவழியில் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மத்திய அரசின் முடிவை, தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கனவே சேர்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்வது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் (1956) மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (2019) ஆகியவற்றை மீறுவதாகும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.