டில்லி:

மருத்துவ கல்லூரி முறைகேட்டில் கைதான முன்னாள் நீதிபதியின் உரையாடல் கசிந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குதுசி மருத்துவ கல்லூரி முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர் இன்று நகர நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘இந்த வழக்கில் தொடர்புடைய 2 நபர்களுடன் நான் தொலைபேசியில் உரையாடிய தகவல் மீடியாக்களுக்கு எப்படி கிடைத்தது’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சிறப்பு நீதிபதி மனோஜ் ஜெயின், இது குறித்து வரும் 22ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், ‘‘பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய ரகசிய ஆவணம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கூட வழங்கப்படாத நிலையில் எப்படி வெளி நபர்களுக்கு கிடைத்தது’’ என்று கேள்வி எழுப்பினார்.

உ.பி.மாநிலத்தை சேர்ந்த ஒரு மருத்துவக் கல்லூரியின் உரிமையாளர் பி.பி. யாதவ், இடைத்தரகர், குதுசி ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் அதில் இடம்பெற்றுள்ளது. ‘‘இந்த உரையாடலை சிபிஐ.யில் உள்ள நபர்கள் தான் வெளியிட்டிருக்க வேண்டும்.

அல்லது 3வது நபரால் திருடப்பட்டிருக்க வேண்டும். ரகசிய ஆவணம் கசிந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.