டில்லி,
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதி மன்றம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக சிபிஎஸ்இ சார்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதையடுத்து இன்று பிற்பகல் மத்திய மாநில அரசுகள் சார்பாக வாதாடப்பட்டது. அப்போது, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதாடினர்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
தமிழகத்தில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீட்டில் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு தேவை என்றும், அவசர சட்டத்தின் காரணமாக பாதிக்கப்படுவோர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீட் தேர்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. , விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 22ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.
தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, நீட் தேர்விலிருந்து ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில், உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.