சென்னை:
சட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல்.
தமிழகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ள பிரம்மாண்ட சங்கத் தேர்தல். அதே நேரம், ஏற்கெனவே தலைமை வகித்தவர்கள் மீது பல்வேறு புகார், தேர்தல் முறைகேடு புகார், நீதிமன்றத்தில் வழக்கு என்று பல்வேறு பரபரப்புகள்.
தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் தேர்தல் நடக்கிறது.
இதற்கு முன்பாக தமிழ்நாடு மருத்துவக் கழகம் (தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்) குறித்து தெரிந்துகொள்வோம்.
இது நூறாண்டு பாரம்பரியம் கொண்டது. இந்தியாவிலேயே முதன் முதலாக 1914 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. .
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெறும் மருத்துவர்கள் அனைவரும் இந்த தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் மருத்துவர்களாக பணிபுரியலாம்: உயர்கல்வியும் படிக்க முடியும்.
இல்லாவிட்டால் மருத்துவர்களாக பணியாற்றவோ, உயர் கல்வியும் பயிலவோ இயலாது.
இந்த அமைப்பில், தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகளை சார்ந்த மருத்துவர்களும் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இப்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.. இதற்கு முன்பு 2012ம் வருடம் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதியோடு முடிந்தது.
ஆனால் உடனடியாக தேர்தலை நடத்தி நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யாமல் உள்ளாட்சி தேர்தலைப் போன்று கால நீட்டிப்புச் செய்துவந்தனர், முந்தைய நிர்வாகிகள். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனாலும் தேர்தலை ஜனநாயக முறைப்படி அமைதியாக நடத்த முடியாத நிலையை ஒரு பிரிவினர் ஏற்படுத்தினார்கள். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அமையும் வரை, மருத்துவக் கழகத்திற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமனை நிர்வாகியாக நியமித்தது உயர்நீதிமன்றம். மேலும், அவரையே தேர்தலை நடத்தும் அதிகாரியாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
தமிழ்நாடு மருத்துவக் கழகத்திற்கு ஏழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான வாக்குச் சீட்டு, மருத்துவர்களுக்கு அவர்களது முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த முறையும் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கும்பணி ஆரம்பித்துவிட்டது. அதனை பெற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து, பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மருத்துவக் கழகத்திற்கு தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
அந்த வாக்குகள் பிப்.13 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் மற்றும் அரசு நியமனம் செய்யும் மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து மருத்துவக் கழகத்திற்கான தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.
கடந்த 2012 ம் வருடம் நடந்த தேர்தலில் 82 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும், 13 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
அதாவது 15 சதவிகிதத்தினரே வாக்களித்தனர்.
இந்த முறை மருத்துவர்களின் முகவரிகள் சேர்க்கப்பட்டு மொத்தம ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. நான்கு அணிகள் பரபரப்பாக பிரச்சாரம் செய்கின்றன.
அதெல்லாம் பெரிய விசயமில்லை… இந்தத் தேர்தலிலாவது அனைத்து மருத்துவர்களும் வாக்களிக்க வேண்டும்.