சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின்படி  மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தீர்வு – நீட் – கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி, தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணை கடந்த அதிமுக ஆட்சியின்போது வெளியிடப்பட்டது.  முன்னதாக இதுதொடர்பான மசோதா தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் மற்றும் மத்தியஅரசின் ஒப்புல் பெறப்பட்டது. அதன்படி கடந்த இருஆண்டுகளாக  மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் 3வது ஆண்டாக மாணவர் சேர்ககை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில்  சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் விடுதி, பயிற்சி, தேர்வு உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வாங்கக்கூடாது என அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் எனவும் உத்தரவிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள  அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.