சென்னை: மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசு வழங்கும் மானியமும் கிடைக்காததால், மக்கள் எரிவாயு சிலிண்டருக்காக அதிக ரூபாய் செலவிட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார். எனவே ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதம் ஒன்றுக்கு, 10 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, 2006ல் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடானது 59 ஆயிரத்து 852 கிலோ லிட்டர் ஆக இருந்ததாகவும், தற்போது அதனை 7 ஆயிரத்து 536 கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் கூறினார். இதன் காரணமாக சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு 3 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஒரு லிட்டரும் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், முதல்வரிடம் ஆலோசித்து மத்திய அரசிடம் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இதேபோல், மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை மட்டுமல்லாது மருத்துவ கல்லூரிகள் இல்லாத பிற மாவட்டங்களிலும் கல்லூரி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.