பெரம்பலூர்:

பெரம்பலூரைச் சேர்ந்த 19 வயது மாணவி, இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும், தனது லட்சியப் படிப்பான மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவ மாணவிகளின் மருத்துவக்கனவு பொய்த்து போன நிலையில், ஏற்கனவே அனிதா உள்பட பலர் தற்கொலை முடிவை நாடியுள்ள நிலையில், தற்போது பெரம்பலூர் மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெரம்பலூர்  பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழக போக்குவரத்துத் துறை ஊழியர் செல்வராசு. இவரது மகள்  மகள் கீர்த்தனா. சேலம் அருகே உள்ள உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து1,053 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு  2 ஆண்டுகளாக நீட்  தேர்வு எழுதியும் அவருக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

இதன் காரணமாக மனம் உடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் முயற்சி செய்தபோது, அங்கு வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.