சென்னை: தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் சட்டசபை தேர்தலில் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதி கடந்த 26ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் சட்டசபை தேர்தலில் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்படும்.
படிவம் 12D யை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று, அதனை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை மார்ச் 16ம் தேதிக்குள் நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளில் இருப்பபவர்கள், தபால் வாக்கு அளிக்க தகுதியானர்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
* லோகோ – பைலட்
* உதவி லோகோ – பைலட்
* மோட்டார் மேன்
* காவலர்கள்
* பயண டிக்கெட் பரிசோதகர்
* ஏ.சி கோச் உதவியாளர்
* ஆர்பிஎப் பணியாளர்கள்
* பத்திரிகையாளர்கள்
* கப்பல் போக்குவரத்து
* விமான போக்குவரத்து