டில்லி

டகங்களில் பெரும்பகுதியாயினர் அரசின் இரு கரங்களாக அரசுக்கு விளம்பரம் தேடித் தருவதாக தி இந்து பதிப்பக குழு இயக்குனர் என் ராம் தெரிவித்துள்ளார்.

நேற்று டில்லியில் சமுதாயத்தில் ஊடகங்களின் பங்கு குறித்து ஒரு கருத்தரங்கு நடந்தது.  செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் ஊடக பிரிவு நடத்திய இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளரும் தி இந்து பதிப்பக குழு இயக்குநருமான என் ராம் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   இந்த கருத்தரங்கில் பத்திரிகை ஆசிரியர் சம்மேளன தலைவர் சீமா முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்து என் ராம் தனது உரையில், “ஊடகங்கள் தனது பணியைச் சரியாக செய்வதில்லை என ஒரு குறை உள்ளது.  ஆனால் உண்மையில் ஊடகங்கள் தனது பணியாக இல்லாத பலவற்றையும் பல இடங்களில் செய்து வருகிறது.  குறிப்பாக காவல்துறையினர் வெளியிடும் தவறான செய்திகளையும் மற்றவரை தரக்குறைவாகச் சித்தரிக்கும் செய்திகளையும் பெயர் தெரிவிக்க விரும்பாதோர் அளிக்கும் தகவல்களையும் வெளியிடுகின்றன.

மொத்தத்தில் ஊடகங்களில் பெரும்பகுதியினர் மத்திய அரசு மற்றும் இந்து ராஜ்ஜிய கொள்கைகளின் விளம்பரங்களின் இரு கரங்களாக செயல்பட்டு வருகிறது.  குறிப்பாக மார்ச் 2020 ஊரடங்குக்குப் பிறகு வெளியான புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் குறித்த தவறான தகவல்களை உதாரணமாகக் கூறலாம்.   ஆனால் ஊடகங்கள் விவசாயிகள் போராட்டம் குறித்த உண்மை செய்திகளை வெளியிட்டது வரவேற்க தக்கதாகும்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசி இந்திய மக்களில் 1% பேருக்கு மட்டும் போடப்பட்டுள்ளதைப் பதிந்த ஊடகங்கள் அந்த எண்ணிக்கை பிரிட்டனில் 26% மற்றும் அமெரிக்காவில் 18% மக்களுக்குப் போடப்பட்டதை விட மிகக் குறைவானது என்பதைக் கூறவில்லை.   ஊடகங்களில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரசு குறித்த விளம்பரங்கள் செய்திகளாக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை முன்னாள் பத்திரிகை ஆசிரியர் ராம் மனோகர் ரெட்டி, சீமா முஸ்தபா ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.  சீமா முஸ்தபா ஊடகங்கள் அரசின் அடிமைகளாக இல்லாமல் பழைய நிலைக்கு ஊடகங்கள் மாற வேண்டியது மிகவும் அவசியம் எனத் தனது உரையில் வலியுறுத்தி உள்ளார்.