திருப்பாவை – பாடல் 29  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 29 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 29

திருப்பாவை பாடல் 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

விடியற்காலையில் வந்து உன்னை வழிபட்டு உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கேட்பாயாக ! பசுக்களை மேய்த்து பிழைக்கும் ஆயர்குலத்தில் நீ பிறந்தாய். எங்களுடைய இந்த சிறு விரதத்தை கண்டுகொள்ளாமல் போகாதே! இன்று நீ தரும் சிறு பறையை பெறுவதற்கு மட்டும் நாங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. 

எங்கள் தலைவனே! என்றைக்கும் தொடர்ந்து வரும் 7 பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உமக்கு மட்டுமே பணிகள் செய்யும் புண்ணயத்தை எங்களுக்கு அருள வேண்டும். இது தவிர ஏனைய எம் ஆசைகள் யாவற்றையும் நீயே அகற்றி விடு.