சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது, தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்து உள்ளார்.
தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற முடியாததால், மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பம்பரம் பறிபோனது. இதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சின்னம் விவகாரம் தொடர்பாக கூட்டணிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போதும், மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது என்று கூறினார். பின்னர், ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்படி போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ கூறியுள்ளார்.
நான் லட்சியத்திற்காக வாழ்பவன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னைப்பற்றி ஒரு சில நாளிதழ்கள் நஞ்சை கக்கி வருகின்றன, அதில் எள்ளளவும் உண்மையில்லை எறு கூறியவர், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மறுத்த வைகோ, வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.