சென்னை: துரை வையாபுரியை நான் அரசியலுக்கு வர ஊக்குவிக்கவில்லை. கட்சியினர்தான் அழைத்து வருகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து புலம்பியவர், தற்போது, தொண்டர்களின் விரும்புவது நிறை வேற்றப்படும் என தெரிவித்து உள்ளார். இதனால், வைகோவின் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவில், `வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்க வேண்டும்’ என்ற குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், வைகோவோ தான் `அரசியல் வாழ்க்கையில் தான் அடைந்த சிரமங்களை தன் குடும்பத்தினரும் பெற்றுவிடக் கூடாது என வைகோ, தனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என பலமுறை தனது கருத்தை பதிவிட்டுவருகிறார்.
ஆனால், துரை வையாபுரியோ, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலியே, மதிமுகவினருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதுமட்டுமின்றி, மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார். இதுதவிர, தந்தையின் வழியில் வெளிநாடுகளில் துன்பப்படும் தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவதிலும் சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். இதுமட்டுமின்றி, உடல்நலக் குறைவு காரணமாக வைகோ பங்கேற்காத நிகழ்ச்சிகளில் அவர் சார்பாக துரைவையாபுரி பங்கேற்று வந்தார். இதன் காரணமாக அவருக்கு பதவி வழங்க மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் 20ந்தேதி நடைபெறவுள்ள மதிமுக உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, துரை வையாபுரி அரசியலில் ஈடுபடுவதை நான் ஊக்குவிக்கவில்லை, முடிந்தவரை தடுக்கவே பார்த்தேன் என்று புலம்பி உள்ளார்.
மதிமுக தொண்டர்கள்தான், தங்களுக்கு நல்ல வழிகாட்டும் என என்னையும் மீறி துரை வையாபுரியை அரசியலுக்குள் அழைத்துச் செல்கின்றனர் என்றவர், மதிமுக ஜனநாயக முறைப்படி உருவாக்கப்பட்டது என்பதால், தொண்டர்கள் விரும்புவது நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
துரை வையாபுரி அரசியலுக்கு வந்தால், அது திமுகவைப்போல வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி விடும் என்பதால், வாரிசு அரசியல் என்ற பிம்பத்தை மறைக்கவே, வைகோ தனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்பது போல ஒரு போலியான கருத்தை பலமுறை செய்தியாளர்களிடம் பதிவிட்டு வந்ததாகவும், தற்போது, தொண்டர்கள் விரும்பினால், ஜனநாயக முறைப்படி அவர்களின் ஆசை நிறைவேற்றப்படும் என்று கூறுவது, அவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…