சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு இன்று காலை தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல், கூட்டணி குறித்து பேச மதிமுகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை தோழமை கட்சிகளுடன் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேசி வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது, சில கட்சிகள் இடையே அதிருப்தி நிலவியதால் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று முற்பகல் நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதிமுகவை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக தலைமை. இன்று மாலை மதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. அதில் உடன்பாடு எட்டும் என நம்பப்படுகிறது.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு கவுரமாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் வலியுறுத்தி வரும் வைகோ, குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், திமுக தலைமையோ அதிகபட்சமாக 6 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என கூறி வருகிறது. மதிமுகவின் கட்சி அங்கீகாரம் தொடர வேண்டுமானால், குறைந்த பட்ச தொகுதிகளிலாவது களமிறங்கி வாங்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். ஆனால், திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்குவதால் அதிருப்தி நிலவி வருகிறது.