சென்னை.
ஜெனிவா ஐ.நா.சபையில் உரையாற்ற சென்றுள்ள வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசியக் கொடி எரிக்கப்பட்டது.
ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநா கூட்டத்திற்கு வந்திருந்த சிங்களர்கள், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இதுகுறித்து, வை.கோ. ஐ.நா.வில் புகார் செய்தார். அதையடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.
வைகோ மிரட்டப்பட்டதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை தேசிய கொடியை எரிக்கப்பட்டது. கொடியை எரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.