“பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதிமுக விசுவாசிகளாக இருந்த பலர் இப்போது அதிமுக அணிகளில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர் என்ற ரகசியம் எனக்கு தெரியும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால் மத்திய பாஜக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கிறோம் என நம்பவைத்து இறுதியில் ஏமாற்றிவிட்டது.
இதற்கு முழுப்பொறுப்பு மத்திய அரசுதான். ஆகவே,, அனிதாவின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம். நீட் பிரச்சினையில் தமிழக அரசு இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. கட்டாயம் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “சமூக வலைதளங்களில் மதிமுக விசுவாசிகளாக இருந்த பலர் இப்போது அதிமுக அணிகளில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர் என்ற ரகசியம் எனக்கு தெரியும்” என்றும் வைகோ தெரிவித்தார்.