சென்னை,

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்டி) கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் தொடர்பான அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மருத்துவ முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதனை எதிர்த்து தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர்.

மேலும், இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டது.

இதன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற எம்டி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது.

மீண்டும் புதிய பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்தி மேற்படிப்புக்கு மருத்துவர்களை சேர்க்கும் நிலை உருவாகி உள்ளது.

இதையடுத்து, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

மருத்துவ மாணவர் மேற்படிப்பில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் தமிழக அரசு பின்பற்றி வருவதாக கூறினார். மேலும்,  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.