சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 6ந்தேதி மாலை வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் வெளியானதும், இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. இந்த 3ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுவரை  MBBS, BDS படிப்புகளில் சேர 38,912 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர 21,659 பேரும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் சேர 12,689 பேரும் என்று 34,348 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ள என்று தெரிவித்துள்ள மருத்துவ கல்வி இயக்குநரகம்,  இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்களும் வரும் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் http://www.tnhealth.tn.gov.in என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.