சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு (MBBS, BDS)  வரும் 22ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கிய நிலையில், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால், விண்ணப்பங்களும் தாமதமாகி உள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ந்தேதி வெளியானது. இதையடுத்து மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று  அறிவித்துள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலமாக அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துஉள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnhealth.tn.gov.in/  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பெரும்பாலும் ஆன்லைன் கலந்தாய்வே நடைபெறும் என்று கூறப்படுகிறது.