சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில இடங்களுக்கு அக்டோபர் 17 முதல் கலந்தாய்வு நடைபெறும்எ ன அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 6-ம் தேதி மாலை 5மணியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அகில இந்திய கோட்டாவுக்கு கலந்தாய்வு அக்டோபர் 11ந்தேதி தொடங்குகிறது. தொடர்த்நது,. மாநில இடங்களுக்கு அக்டோபர் 17 முதல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், கலந்தாய்வு முடிவடைந்து,. நவம்பர் 15ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது. படிப்புக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்தது. அதேன்படி, பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்து வந்த திமுக அரசு அமல்படுத்தியது.
இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மருத்துவப் படிப்புக்கு மூன்றாவது ஆண்டாகவும், மற்ற படிப்புகளுக்கு இரண்டாவது ஆண்டாகவும் இந்த ஆண்டு தொடர்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
நடப்பாண்டு, தமிழ்நாட்டில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டு 569 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முன்பு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதன்படி, 2014-15-ல் 38 பேரும், 2015-16-ல் 36 பேரும், 2016-17-ல் 34 பேரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2017-18-ல் 3 பேருக்கும், 2018-19-ல் 5 பேருக்கும், 2019-20-ல் 6 பேருக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது.
ஆனால், நீட் தேர்வுக்குப் பின்னர், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது என்று, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்தது. அதேநேரத்தில், தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
2020-21-ல் 435 பேரும், 2021-22-ல் 555 பேரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி 455 பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பு, 114 பேருக்கு பிடிஎஸ் படிப்பு என மொத்தம் 569 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க உள்ளது.