மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி

Must read

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும் முறையை கொண்டு வந்தது.

இதை மாற்றி நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும்படியாக  2011ம் ஆண்டில் ஜெயலலிதா கொண்டுவந்தார். பிறகு அவரே,.மேயர், நகராட்சித் தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும்படியான மாற்றத்தை 2016ல் கொண்டுவந்தார். (இந்த மாற்றத்துக்குப் பிறகு இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.)

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, மீண்டும் மேயர், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் மசோதாவை நேற்று நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பது –  கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பது.. எது சிறந்த முறை என்று, சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை.துரைசாமியிடம் கேட்டோம்.

சைதை துரைசாமி

அவர் விளக்கமாக நமக்கு அளித்த பதில்:

“மக்களே நேரடியாக மேயரை தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது. உதாரணமாக சென்னையை எடுத்துக்கொள்வோம்., 200 வார்டுகளில் இருக்கும் மக்களால் மேயர் நேரடியாக தேர்ந்தெடுத்தால்தான் அந்தத வார்டுகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக மேயர் அறிய முடியும். தீர்க்க முடியும்.

தங்கள் பகுதி கவுன்சிலர்கள் சரிவர செயல்படவில்லை என்றாலும், மக்கள் நேரடியாக மேயரை சந்தித்து “நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம். பணிகள் நடக்கவில்லை” என்று உரிமையுடன் அணுக முடியும்.

அதாவது மேயரிடம் நேரடியாக கோரிக்கை வைக்கும் உரிமையை மக்கள் பெருவார்கள். அந்த பிரச்சினையை தீர்த்துவைக்கும் கடமையை மேயர் பெறுவார்.

ஆனால் மாமன்ற உறுப்பினர்களல் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இது போல நடக்காது. பிரச்சினைகளுடன் மேயரை மக்கள் அணுகினால், “உங்கள் கவுன்சிலர்களிடம் சொல்லுங்கள்.. மண்டலக்குழு தலைவரிடத்தில் சொல்லுங்கள்” என்று தட்டிக்கழிப்பார்கல். ஒட்டுமொத்தமாக மாநகராட்சியே தனது பகுதிதான் எந்த எண்ணம் மேயருக்கு வராது.

தனக்கு வேண்டிய உறுப்பினர்களுக்குத்தான் – அதாவது, அவர்களது பகுதிகளுக்குத்தான் பணிகளை ஒதுக்கீடு செய்வார்.  அதே போல, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கு  மட்டும் அதிக பணிகளைச் செய்வார். மேலும் தவறு செய்யும் கவுன்சிலர்களை மேயரால் தட்டிக்கேட்க முடியாது. அவர்களது கைப்பாவையாகவே மேயர் செயல்பட வேண்டியிருக்கும்.

கவுன்சிலர்களும் சுயநலத்தோடு செயல்படுவார்கள். “நாங்கள்தானே தேர்ந்தெடுத்தோம். நாங்கள் நினைத்தால் உங்களை மாற்றிவிடுவோம்” என்று மேயரையே மிரட்டுவார்கள். இதை வைத்தே தவறான நோக்கங்களுக்கு மேயரை பயன்படுத்துவார்கள். அதிகாரிகளை மிரட்டுவார்கள். இட மாற்றம் செய்வார்கள்.

அதிகாரிகளும் மேயரின் சரியான உத்தரவுகளை மதிப்பதைவிட.. தவறாக இருந்தாலும் கவுன்சிலரின் உத்தரவுகளுக்கே கீழ்ப்படிவார்கள்.

சைதை துரைசாமி – மா.சுப்ரமணியன்

இரண்டு முறைகளில் எது சிறந்தது  என்பதற்கு சென்னை மாநகராட்சியே உதாரணம்.

2006 முதல் 2011 சென்னை மாநகர மேயராக, தி.மு.க.வைச் சேர்ந்த  மா.சுப்பிரமணியன் பொறுப்பு வகித்தார். கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர்.

2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. சார்பில் பேட்டியிட்டு வென்று சென்னை மாநகர மேயராக நான் பொறுப்பு வகித்தேன். நான் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இருவரின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டாலே எந்த முறை சிறந்தது  என்பது தெரியும்.

மா.சுப்பிரமணியன் தனது காலத்தில் கள ஆய்வு, கலந்தாய்வு (பகுதிகளை ஆய்வு செய்வது மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை) செய்தது சுமார் 700 முறைகள்.

எனது காலத்தில் இந்த கள மற்றும் கலந்தாய்வு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைகள் நடந்தன.

மா.சு. காலத்தில் சுமார் 9000 பணிகள் நடந்தன.

எனது காலத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிகள் நடந்தன.

பொது மக்களிடம் மா.சு. பெற்ற மனுக்கள் எண்ணிக்கை சுமார் 5000

நான், பொதுமக்களிடம் பெற்றது மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 629.

மா.சு. காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 606.  முடிக்கப்ட்டது 253. அதாவது பணிகள் நிறைவேற்றப்பட்ட சதவிகிதம்  33.73.

என் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 419. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்  392. அதாவது பணிகள் நிறைவேற்றப்பட்ட சதவிகிதம்  93.55.

ஆக இதிலிருந்தே தெரியும்… மேயர் அல்லது நகராட்சித் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதே சிறந்த முறை என்பது”  என்று சொல்லி முடித்தார் சைதை துரைசாமி.

அவரிடம், “கவுன்சிலர்கள் மூலம் மேயர் அல்லது நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றுதானே இறுதியாக 2016ம் வருடம் ஜெயலலிதா  திருத்தம் கொண்டுவந்தார். அ.தி.மு.கவைச் சேர்ந்த நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே” என்று கேட்டோம்.

ஜெயலலிதா

அதற்கு சைதை துரைசாமி, “நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையைவிட, கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது  என்று தவறான தகவலை உடனிருந்த சிலர் ஜெயலலிதாவிடம்  சொல்லி வந்தனர். அதன் பிறகே மீண்டும், கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கும் முறையை ஜெயலலிதா கொண்டு வந்தார்.  ஆனால், “நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது” என்பதை விரைவில் உணர்ந்தார். ஆகவே மீண்டும் மாற்றம் கொண்டுவர நினைத்தார். இதை என்னிடமும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அற்குள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அவர் சேரவேண்டியதாயிற்று” என்ற சைதை துரைசாமி இறுதி பஞ்ச் ஆக சொன்னது:

“நம்நாடு” படத்தில் எம்.ஜி.ஆர்.

“தான் நடித்த நம்நாடு திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். இந்த விசயத்தைச் சிறப்பாக சொல்லியிருப்பார்.

அந்தப் படத்தில் மிக நேர்மையான மனிதராக துரை என்ற கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். வருவார். அவரது நேர்மையைப் பார்த்து கவுன்சிலர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் காலப்போக்கில் எதிரியுடன் சேர்ந்துகொண்டு, கவுன்சிலர்கள் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுப்பார்கள். அதாவது சட்டத்துக்குப் புறம்பாக காண்ட்ராக்ட் கொடுக்கும்படி கேட்பார்கள். பணம் வேண்டும் என்பார்கள்.

நேர்மையான நகராட்சித் தலைவரான எம்.ஜி.ஆர். இதற்கு உடன்பட மாட்டார். ஒரு கட்டத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து நகராட்சித் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கவிடுவார்கள் கவுன்சிலர்கள்.

ஆக, மேயரோ, நகராட்சித் தலைவரோ நேரடியாக தேர்ந்தெடுப்பதே சிறந்தது  என்பதை அந்தப் படம் மூலம் உணர்த்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.” என்று சொல்லி முடித்தார் சைதை துரைசாமி.

More articles

Latest article