டில்லி:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே மாதம் 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள்  தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மத்திய அரசு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை  நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய நிலையில், தற்போது தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும்,  எம்பிபிஎஸ் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்கான விண்ணப்பம்  கடந்த ஆண்டு (2018)  நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி ஆன்லைனில் பெறப்பட்டது. இதற்கிடையே 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 7ம் தேதி நீட்டிக்கப்பட்டது.

2019-20ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும்  15.19 லட்சம் மாணவ மாணவிகள்  விண்ணப்பம் செய்து உள்ளனர். ‘ தமிழக மாணவர்கள் மட்டும் 1.40 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

நீட் தேர்வு மே 5ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றன. தமிழக மாணவர்கள், அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வை எழுத வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் பல பிரச்சினைகள் எழுந்தன. அதுபோல கேள்வித்தாள் விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்தன.

இதை கருத்தில்கொண்டு,   எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு, இந்தாண்டு தமிழக மாணவர்கள் நீட் தேவை தமிழகத்திலேயே எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 2மணி முதல் இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து தங்களது ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்..

ஹால்டிக்கெட் தரவிறக்கம் செய்யும் இணையதள முகவரி…

https://ntaneet.nic.in/Ntaneet/online/CandidateLogin.aspx