சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்போக்குப் புத்தகக்காட்சியின் நிறைவு நாளில் (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி சென்றார். அப்போது  “வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” என கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி முன்னெடுத்த ‘தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ வை கடநத 8ந்தேதி முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தொடக்க நாளில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியிடப்பட்டு, கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார்.  மேலும், ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், புத்தகக்காட்சியின் நிறைவு நாளான  நேற்று (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி சென்றார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் தளபத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“திமுக 75 அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!

வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.

குறிப்பாக, ‘Carry on, but remember’ எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்.

வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது இளைஞரணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!”

இவ்வாறு கூறி உள்ளார்.