ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுவிடலாமே…

Must read

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி இரவு வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகி உள்ளது.

வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்கவே, அனைத்து வகையான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதை தவிருங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் காலில் விழாத குறையாக வேண்டுகோள் விடுத்து வருகிறது…

ஆனால்… நமது மக்களோ.. அதை கிஞ்சித்தும் காதில் போட்டுக்கொள்ளாமல், யாருக்கோ ஊரடங்கு போடப்பட்டு இருப்பதாக கருதிக்கொண்டு, எப்போதும்போல ஹாயாக சாலைகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் விடுமுறையை கழிக்கும் நோக்கில் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள்…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசின் சுகாதாரத்துறை இரவுபகல் பாராது பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில், அவர்களின் பணிகளை கேவலப்படுத்தும் வகையிலும், இழிவுப்படுத்தும் வகையிலும் ஏராளமானார் செயல்பட்டு வருவது வருத்தத்திற்குரிய விஷயம்..

அதுவும் சென்னை போன்ற மாநகரங்களில் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்படும் போக்கு அதிகஅளவில் காணப்படுகிறது…

கடந்த 25ந்தேதி அன்று அதிகாலையிலேயே நகர் முழுவதும் டீக்கடைகளில் கூடிய கூட்டம் அதை நிரூபிக்கும் வகையில் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்தே டீக்கடைகளை மூட அரசு உத்தரவிட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதாக கூறிக்கொண்டு பெண்களும், ஆண்களும் மார்க்கெட்டை நோக்கி எப்போதும்போல அளவளாவிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டு வருவதும் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது…

கொரோனா தாக்கம் எவ்வளவு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாம் அனைவரும் கண்முன்னால் பார்த்து வருகிறோம்

உலக வல்லரசனா அமெரிக்கா உள்பட சீனா வரை அனைத்து நாடுகளும் ஒரு கண்ணுக்கு தெரியாத வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன…

நமது நாட்டிலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடையே நேரடியாக உரையாற்றியும், மக்கள் எப்போதும்போல எருமை மாட்டு முதுகில் மழைபெய்தது போலத்தான் உணர்ச்சியற்று காணப்படுகின்றனர்…

மக்கள் வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என தகவல்கள் வெளியான உடனே, நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் பெரும்பாலும் தங்களுக்கு தேவையான பொருட்களை சேமித்துக்கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… இதற்கு கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் கூடிய மக்கள் கூட்டமே சாட்சி…

(இது உண்மையில்லை என்று சில விளக்கெண்ணைகள் பிதற்றும்.. அவர்கள் ஊடகங்களில் வெளியான செய்திகளையும், காட்சிகளையும் ரிவைண்ட் செய்து தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்)

இதற்கிடையில், அண்ணாசாலை போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், சாரை சாரையாக வந்துகொண்டிருந்த வாகன ஓட்டிகளை காவல்ஆய்வாளர் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளும்… பரிதாப காட்சிகளும் அரங்கேறின…

யாருக்காக இந்த வேண்டுகோள்…  அவரது குடும்பம் மட்டும் வாழவா… நீங்களும்.. உங்கள் குடும்பத்தினரும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கத்தானே…

இதற்கு பிறகுதான்… பல மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு மீறுபவர்களை காவல்துறையினர் ‘கவனிக்கும் காட்சிகள்’ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்திலும் காவல்துறையினரும் சற்று கடினமாக நடந்துகொள்ளத் தொடங்கினர்.

யாருக்காக இந்த கடுமை… எதற்காக இந்த கடுமையான நடவடிக்கை என்பது குறித்து சற்றும் கவலைப்படாமல், சில வெட்டி அரசியல்வாதிகளும், கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்களும் கூக்குரல் போடுகின்றனர்… ஏன் இந்த கூப்பாடு?

மக்கள் நலனுக்காக ஒரு அறிவிப்பு வெளியிடும்போதும், சட்டங்கள் அமல்படுத்தப்படும்போதும் அதற்கு கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். இதைத்தானே நமது அரசியல் சாசன சட்டமும் தெரிவிக்கிறது.

இப்படி இருக்கும்போது, சட்டத்தை மீறி செயல்படுபவர்களை தடுக்கக்கூடாது என்று கூப்பாடு போடுபவர்கள், ஒருவேளை அவர்களோ, அவர்களது குடும்பத்தினரோ  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அரசின் உதவிகளை நாடமாட்டார்களோ…

நமது நாட்டில் தெருவுக்கு தெரு ஏராளமான மளிகைக்கடைகள்  உள்ள நிலையில், கூப்பாடுபோடும் நபர்கள் சற்றே, நெடுஞ்சாலைகளை தவிர்த்து, நகரத்தின் உள்பகுதிச் சாலைகளுக்கு சென்று பாருங்கள். ஊரடங்கு உத்தரவுக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை கண்கூடாக காணலாம்…

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாகி வருகிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும்…

ஆனால் தமிழகஅரசோ, காவல்துறையினர் நடவடிக்கைக்கு தடை போட்டுள்ளது.

வாக்கு வங்கியை கவனத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் மக்களை தடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது…

இதனால் சாலைகளில் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணத்தொடங்கி உள்ளது.

தமிழகஅரசுக்கு ஏன் இந்த தடுமாற்றம்…

இதற்குப்பதில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கிவிடலாமே…. போக்குவரத்தையும் தொடங்கி விடலாமே…

கொரோனா தொற்றுக்காக அரசு செலவழிக்கும் பணமும், உதவிகளையும், மருத்துவ ஏற்பாடுகளையும் தவிர்த்துவிடலாமே…

இரவுபகல் பாராது மக்களை பாதுகாக்கும் பணியில் உழைத்துவரும் மருத்துவப்பணியாளர்களாவது ஓய்வும், நிம்மதியும் பெறுவார்களே…

மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகையான தொழில்நிறுவனங்களும் முடங்கி உள்ள நிலையில், அடிமட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்புடன்  அரசு பள்ளிக்கூடங்களிலோ, சமுதாய நலக்கூடங்களிலோ தேவையான உதவிகளை பாதுகாப்புடன் அரசு வழங்க முன்வரலாம்.

இதற்கு தேவையான தன்னார்வலர்களை அழைத்து, பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு ஏராளமானோர் தயாராக உள்ளார்கள்.

அதை விடுத்து ஊரடங்கு உத்தரவை கேலிக்குள்ளாக்குவது ஏன்?

கோயம்பேடு சந்தையில் இன்று காலை கூடிய வியாபாரிகள் கூட்டத்தை சற்றே கண்முன் கொண்டுவந்து வாருங்கள்… 90 சதவிகித வியாபாரிகள் எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

இந்த சந்தை 2 நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மக்கள் கூட்டம் இல்லை என்பதால் மீண்டும் திறப்பதாக வியாபாரிகள் அறிவித்து, தங்களது கல்லா நிறைய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்தியாவிலே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் பலியான நிலையில், தமிழகத்திலும் சிலர் உயிரிழந்துள்ள நிலையில்,  29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 15,788 போ தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனைகளில் மட்டும் 284 பேர்  அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 962 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை எவ்வாறு கட்டுப்படுத்தபோகிறோம் என்று மருத்துவ வல்லுநர்களும், மத்திய மாநிலஅரசுகளும் திணறி வருகின்றன..

ஆனால், பொதுமக்களோ அதைகுறித்து கவலைப்படாமல் சாலைகளை சுற்றி வருகிறார்கள்… நாளைக்கு ஏதேனும் தவறு ஏற்பட்டால், அப்போது அரசு மீது குற்றம் சுமத்துவார்கள்… அரசியல் கட்சிகளும், அரசின் நடவடிக்கை தோல்வி என்று  கூப்பாடு போடும்…

இதுபோன்ற விதண்டாவாதங்களை தவிர்க்க நாம் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் வீடுகளில் இருந்து, கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்வர வேண்டும்…

இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கையில், கொரோனா வைரஸ் தொற்றால், அரசுகள், உங்களை வீட்டில் இருந்து செயலாற்ற பணித்து உள்ளது.

இதை துன்பமாக கருதாமல், வீட்டில் இருப்பதை சந்தோஷமாக உணர்ந்து, கடவுள் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தை செலவிட அரிய வாய்ப்பு வழங்கியிருப்பதாக எண்ணி, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அளவளாவுங்கள்.. கடந்த கால நினைவுகளை அசைபோடுங்கள்… மனைவி மக்களுடன் மலரும் நினைவுகளை பகிருங்கள்… நேரம் செல்வதே தெரியாது…

தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசுக்கு ஜாதி, மதம், இனம் தெரியாது… இதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள

தும்மல் வந்தால் முழங்கையால் முகத்தை மறைத்து கொள்ளுங்கள். கதவுகளைத் திறக்கும் போது முழங்கையை பயன்படுத்துங்கள் என முன்னெச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இதை பலர் செவிமடுக்காமல் நடந்துகொள்கிறார்கள். பலர் ஊருக்குள் மெத்தனமாக உலாவருதைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது…

உங்களை கொரோனா ஆட்கொண்டால்… அதற்கு பலியாகப்போவது நீங்கள் மட்டுமல்ல நண்பர்களே…உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் அண்டை வீட்டாரும்கூட என்பதை நினைவில் கொள்ளுங்கள்…

ஒரு வினாடி யோசித்துப்பாருங்கள்…

கொரோனா பரவலில் இருந்து, தங்களை பாதுகாப்பதில், பொதுமக்கள் மெத்தனமாக  நடந்துகொள்வதால், தற்போது அரசும் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது.

மக்களை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு, நமக்கென்ன என்ற நோக்கில், காவல்துறை எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைக்கும் தடை போட்டுள்ளது.

வாக்கு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு தமிழக அரசு இந்த கொடுஞ்செயலை செய்து வருகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இதுபோன்ற உத்தரவை போடுவதற்கு பதிலாக, மாநில அரசு ஊரங்கு உத்தரவை வாபஸ் பெற்றுவிடலாமே…

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, அதில் கடுமை காட்டாமல், ஏதோ ஒருசிலர் கூப்பாடு போடுகிறார்கள் என்பதற்காக, மக்களின் உயிரோடு விளையாடுவதை கைவிட்டு, ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும்…

இல்லையேல் எடப்பாடி அரசு வரலாற்று பிழை செய்தாதாக எதிர்காலம் பகிஷ்கரிக்கும்.

கொடிய விஷக்கிருமி கொரோனா என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..!

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article