சென்னை,

2016ல் பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், மற்றொரு வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளதாக அறிவித்தனர்.

ஐஓசி அலுவலகம்மீது கல்வீசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் ஆகியோரைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மூன்று பேரையும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, தன்மீது பொய்வழக்குப் பதியப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி புகார் கூறினார்.

பின்னர், திருமுருகன் உள்ளிட்ட மூன்று பேரின் காவலை ஜூன் 14ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. அவரது நீதிமன்றக் காவல் ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து இன்று 3வது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ல் பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட வருவது தமிழக மக்களிடையே அரசு மீது அதிருப்தியை தோற்றுவித்து வருகிறது.

பாரதியஜனதாவின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டுவருவதாக சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.