சென்னை; தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான். அதாவது அதிமுக ஆட்சியின்போதுதான், 15 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, அடுத்தடுத்து லாக்கெப் டெத்கள் நடைபெற்றது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றமும் தமிழக காவல்துறைமீது கடுமையாக சாடியது. அரசியல் கட்சியினரும், ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக மதுரை மக்கள் கண்காணிப்பகம் ஏற்கனவே தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வை கருத்தரங்கு களை நடத்தி வருகிறார். மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் போலீஸ் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடந்தது. இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன. 2021 இல் நான்கு மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.