துரா

துரா நகரக் காவலர் ஒரு கடைக்காரரை குட்காவுக்கான விலை ரூ.5 கேட்டதற்காக அடித்துக் கொன்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் ராகுல் பன்சால் என்னும் 32 வயது இளைஞர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.  மதுராவின் ஃபிரோஸாபாத் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் யோகேந்திர சவுத்ரி என்பவர் இந்த கடையில் குட்கா வாங்கி உள்ளார்.   அந்த குட்காவின் விலையான ரூ.5 ஐ கடைக்கார இளைஞர் கேட்டுள்ளார்.  அதைத் தர காவலர் மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.   வாக்குவாதம் முற்றவே கடைக்காரர் ராகுல் பன்சாலை காவலர் யோகேந்திர சவுத்ரி அடித்து உதைத்துள்ளார்.   இருவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மதுரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அங்கு ராகுல் பன்சால் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை அவர் குடும்பத்தினர் மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.   இது அந்த பகுதி மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவரை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ராகுலுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்தக்கட்டு ஏற்பட்டு அதனால் அவர் மரணம் அடைந்ததாகக் கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மதுரா நகர மூத்த காவல்துறை அதிகாரி சலப் மாதுர் குறிப்பிட்ட காவலர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் இன்னும் கைது செய்யப்படவில்லை.