பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனையில் மாபெரும் ஊழலுக்கு வாய்ப்பு! தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

Must read

டில்லி:

பிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனை செய்வதில், சொத்துக்களின் விலை மார்க்கெட் விலையை விட குறைத்து மதிப்பிடப்படுவதால்  மாபெரும் ஊழலுக்கு வாய்ப்பு உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணமின்றி நஷ்டத்தில் தள்ளாடி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், நஷ்டத்தை சரிகட்ட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து நிதி திரட்ட முன்வந்துள்ளது.

இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் மூலமாக இந்த நில விற்பனை நடைபெற உள்ளது. இந்த  நிலம் விற்பனை செய்யப்படுவதில் பெரும் ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தொழிலாளர் நலச் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாடெங்கிலும் 32.77 லட்சம் சதுர மீட்டர் அளவிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில்,  சாதாரண நிலத்தின் அளவு மட்டும் 31.97 லட்சம் சதுர மீட்டர்கள். இந்த சாதாரண நிலத்தின் பண மதிப்பு மட்டும், கடந்த 2015ம் ஆண்டின் நிலவரப்படி ரூ.17397 கோடிகள் என்று கூறப்படுகிறது.

முதல்கட்டமாக சென்னை பூக்கடைப் பகுதி உள்பட 63 இடங்களில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில், ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாக பிஎஸ்என்எல் தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த இடங்களின் மதிப்பை அளவிடுவதில் சந்தை விலையை விட மிகக் குறைவாகக் கணக்கிட்டு அடிமட்ட விலைக்கு விற்க முயற்சிகள் நடப்பதாக சென்னை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சென்னை பூக்கடை பிஎஸ்என்எல் நிறுவனத் தின் விற்பனைக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலத்தின்  விலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவற்றின் மதிப்பு மிகவும் குறைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. நிர்ணய விலை என்ற பேரில் சந்தையில் இவற்றுக்கான உயர் மதிப்பு புறந்தள்ளப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் கடன்களை ரத்து செய்கிறோம் என்ற பெயரில் பிஎஸ்என்எல்லின் சொத்துகளை இப்படி அடிமட்ட விலையில் விற்பது ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்கிறார்.

மேலும், தங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சென்னையில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமான எட்டு இடங்களை பிஎஸ்என்எல், எஸ்பிவிக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

இவற்றின் மதிப்பு 2,753.67 கோடி என பிஎஸ்என்எல் நிர்ணயித்துள்ளது. ஆனால், இவற்றின் சந்தை மதிப்போ 3,867.89 கோடி. இதன் மூலம் சென்னையில் மட்டும் பிஎஸ்என்எல்லின் சொத்துகள் 1,262.89 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொழிற்சங்கம் வெளியிட்ட விவரங்களின்படி, நகரின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட எட்டு சொத்துக்களின் மொத்த பரப்பளவு 34.67 லட்சம் சதுரடி. நில சொத்துக்களில் வயர்லெஸ் நிலையங்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை அடங்கும். திருவோற்றியூர் ஹை ரோட்டில் சுமார் 13.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய இடம் உள்ளது.

இவற்றோடு நாடு முழுவதும் 63 இடங்களுக்கு 20,210 கோடி மதிப்பு என்று பிஎஸ்என்எல் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ஆனால், இவற்றின் உண்மை மதிப்பு நிர்ணயித்ததை விட பன்மடங்கு அதிகம். இதன் காரணமாக நிலம் விற்பனையில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்பிவி இந்த நிலங்களைக் கையாள்வதில் நியாயமும் வெளிப்படைத்தன்மையும் வேண்டு மென்பதே எங்கள் கோரிக்கை என்று தெரிவித்துள்ள ஊழியர் சங்க நிர்வாகிகள், பிஎஸ்என்எல்லின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல். அவற்றை உரிய நியாயமான வெளிப்படையான முறையில் கணக்கிட்டு மதிப்பிட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article