ஸ்ரீவில்லிபுத்தூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத விதியில் வீடு இல்லாத மக்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பிறகு பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்,

“நாடு முழுவதும் பெரும்பாலான ஏழைகள் வீடு இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கான
வசிப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை முன்னிறுத்தி தற்போது இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பான மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெரும் நபர்கள் உள்ள வீட்டில் வசிக்கும் பெண்களும் தங்களது உரிமை தொகையை பெறலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தேசிய அளவில் பங்கு சந்தையில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும். பங்கு சந்தையை கண்காணிக்க கூடிய செபி அமைப்பும் கூட தற்போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என்ற ஒதுங்குவது
கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை மேற்கொள்ள பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விசாரணை வளையத்தில் வந்து விடுவார் என்ற பயத்தினாலேயே கூட்டுக் குழு விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களுக்கான முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்”

என்று கூறியுள்ளார்.