சிவகங்கை

ஆர் கே நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு யாருக்கு  என்பதை அக்டோபர் 30ல் முடிவு செய்யப்படும் என ஜி ராமகிருஷ்ணன் கூறினார்.

சிவகங்கையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.  அதில் அக்கட்சியின் மாநில செய்தியாளர் ஜி ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.  பின் அவர் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்.

அப்போது, “ஆர் கே நகரில் எங்களுடைய கட்சியின் ஆதாரவு யாருக்கு என்பதை வரும் 30ஆம் தேதி கூடப் போகும் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.   எங்களைப் பொறுத்த வரையில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப் பட வேண்டும்” என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் மணல் குவாரி பற்றிய கேள்வி ஒன்றுக்கு, “மாநில அரசு புதியதாக 70 மணல் குவாரிகள் திறக்கப் போவதாக அறிவித்தது துயரத்தை உண்டாக்குகிறது.   இதை அரசு நிச்சயம் மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.    இது தொடராமல் இருக்க செயற்கை மணலை உருவாக்குவதோ அல்லது மணல் இறக்குமதி செய்வதோ போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என பதில் அளித்தார்.