மதுரை: மருதுபாண்டியர்கள் குருபூஜை, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு 27ந்தேதேதியும், 30ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை, திருப்புவனம் உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா நாளை (27-ம் தேதி /வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அங்கு ஏராளமானோர் மரியாதை செலுத்த வருவார்கள். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையொட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் நாளை (27ந்தி) சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு 30ந்தேதி சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்ட வீரரும், தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றியவருமான மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டும், 61வது குருபூஜை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இதன்காரணமாக, தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.