சென்னை:  தியாகிகள் தினத்தையொட்டி, தேசப்பிதா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்த நிலையில், சென்னை  தலைமைச் செயலகத்தில்  தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றார்.

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 78-வது நினைவு நாளையொட்டி அவருடைய திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இதையொட்டி,  எழும்பூர் அருங்காட்சியகத்தில்  உள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் உள்ள  ராணுவ அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்ற தீண்டாடை உறுதி ஏற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

அப்போது வாசிக்கப்பட்ட உறுதிமொழியில்,  தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும் என உறுதிமொழி ஏற்றனர்.