அரியலூர்:
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் சிவச்சந்திரனின் 68 வயதான தந்தையும், அவரது 2 வயது மகனும் சிஆர்பிஎப் சீருடை அணிந்து இறுதிக்கடனை செய்த நிகழ்வு அங்கு வந்திருந்தோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
நேற்று முன் தினம் ஜம்மு காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்கு தலில், மத்திய சிஆர்பிஎப் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் இன்று பகல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிவசந்திரனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிவச்சந்திரனின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிக்கடன்கள் நிகழ்ச்சியின்போது, சிவச்சந்திரன் தந்தையான 68 வயது சின்னச்சாமியும், சிவச்சந்திரனின் மகன் 2வயது சிவமுனியன் ஆகிய இருவரும், சிவச்சந்திரனை போன்று சிஆர்பிஎப் சீருடையுடன் இறுதிக்கடன்களை செய்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.