சண்டிகர்: திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-அரியானா மாநில உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநில காவல்துறையில் தலைமைக்காவலராக பணிபுரிந்தவர் கஷ்மீர் சிங். இவர் கடந்த 2018ம்ஆண்டு பணியில் இருக்கும்போதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  அவருக்கு  அமர்ஜித் என்ற பெயரில் ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தார். அவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இருந்தாலும், அந்த பெண், தனது தந்தையின் வேலையை கருணை அடிப்படையில் தனக்கு ஒதுக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதை மாநில அரசும், காவல்துறை நிர்வாகமும்  திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி மறுத்து விட்டன.

இதையடுத்து, அமர்ஜித், பஞ்சாப்-அரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந்தைகளுடன் தாய்வழி வீட்டில்தான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு  கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் விசாரித்தார். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில்,

பணியில் இருப்பவர் உயிரிழந்தால் அவரை நம்பி இருக்கும்குடும்பத்தினருக்கு உதவுவதற்காகத்தான் கருணை அடிப்படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணம் ஆனால் மட்டும் பணி மறுக்கப்படுவது என்பது,  அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிரானது.

திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர்ஜித்துக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.