சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பதிவு முறையில், திருமணம் என்ற பகுதி அகற்றப்பட்டிருந்தது. ஆனால், பலர் திருமணத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது, அதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், திருமண பத்திரிகையின் காப்பி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உஉள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியில் தேவையின்றி ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல இ பதிவு முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இ-பதிவு’ செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

இ-பதிவு செய்வது எப்படி?

http://eregister.tnega.org என்ற இணையதளத்தில்முதலில் உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு,  இணையதளத்தில்  கொடுக்கப்பட்டிருக்கும் ‘கேப்ட்சா’ என்ற எண்ணை பதிவிட்ட வேண்டும். உடனே உங்கள் மொபைலுக்கு ஒடிபி வரும். அதை அருகே உள்ள கட்டத்தில்  பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் முன் தோன்றும் விவர பதிவேட்டில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

அத்துடன் நீங்கள் பயணம் செய்வதற்காக ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

திருமணம் என்ற காரணம் கூறி பலரும் வெளியில் சுற்றி திரிவதால் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற காரணம் நீக்கப்பட்டது. தற்போது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.‘ திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால், திருமண அழைப்பிதழ் உடன் கேட்கப்படும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால்,  திருமணத்திற்காக பயணிக்க அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.