சென்னை:

நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில்,  அனைத்து மகளிரும் சாதனை படைக்கும் பெண்களாக உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று உலகெங்கும் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்திகளையும்  பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முகநூல், வாட்ஸஅப்,  டிவிட்டர் என சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெண்கள் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

 இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், பெண்களின் நல்வாழ்விற்காகவும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்களை ஊக்குவிக்க திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 9 மாத காலம் மகப்பேறு விடுப்பு, “அம்மா இருசக்கர வாகனத் திட்டம்”, பணிபுரியும் சென்னையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மகளிர் பாதுகாப்பை உறுதிசெய்திட “காவலன்” கைப்பேசி செயலி, தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தல், தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலையை குறித்து புகார் தெரிவிக்க பெண்களுக்கென பிரத்யேகமாக இணையத்தளத்தில் வடிவமைக்கப்பட்ட “புகார் பெட்டி” ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய மகளிர் உதவி மையத்தை தொடர்பு கொள்ள 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்கனை படிக்கற்களாக மாற்றி, சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, இந்த இனிய நாளில், அனைத்து மகளிருக்கும் எனது இதயப்பூர்வமான மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பெண்மைக்கு வணக்கம் செலுத்தவும், பெண்களுக்கான சமத்துவத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தவும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமாம் மார்ச் 8-ம் நாளில் நம் தாயாக, மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணைவியாக, ஏன் தெய்வமாகவே வாழ்ந்துவரும் பெண்கள் அனைவருக்கும், இருகரம் கூப்பி மனமார நன்றிகூறி வணக்கம் தெரிவித்து மகிழ்கிறோம்.

புரட்சித் தலைவி அம்மா ஆட்சிக் காலம் “பெண்களுக்கான பொற்காலம்” என்று வரலாறு கூறும் அளவுக்கு பெண்களுக்கான சாதனைகள் பலவற்றை செய்திட்டார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இடங்களை மகளிருக்கு என ஒதுக்கி 2016-ல் புரட்சித் தலைவி அம்மா சட்டம் இயற்றி வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்குத் தங்கம், திருமணப் பரிசாக ரொக்கத் தொகை. பெண்களுக்கென பல சிறப்புத் திட்டங்கள் என்று புரட்சித் தலைவி அம்மா நிகழ்த்திய சமூகநலத் திட்டங்கள் ஏராளம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் அந்த இருபெரும் தலைவர்கள் காட்டிய உயர்ந்த லட்சியங்களின் அடிப்படையில் இப்போது நடைபெறும் கழக அரசு பெண்களின் உயர்வுக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.