சென்னை:
மூத்த கம்யூ.தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் மார்ச் 2ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன். இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். கூடங்குளம் அணுஉலை மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். இவர்மீது மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி நாகர்கோவில் செல்வதாக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலன் திடீரென காணாமல் போனார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி தலைவர்கள், ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கூட்டம் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, முகிலன் கடந்த 15-ம்தேதி முதல் காணவில்லை. அவர்எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது. அவரை காணாமல் குடும்பத்தினரும், நண்பர்களும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா என தெரியவில்லை.
முகிலனை தமிழக அரசு கண்டுபிடித்துத் தரக்கோரி மார்ச் 2-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.