சென்னை:
மார்ச் 1ந்தேதி முதல் ரெயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டு வந்த ரிசர்வேஷன் சார்ட் நிறுத்தப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
முதல் கட்டமாக 6 மாதம் இதை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், பயணிகள் வசதிக்காக பிளாட் பாரங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் செல்லும் பயணிகள் தங்களின் இருக்கை வசதி குறித்து அறிய, ரெயிலின் ஒவ்வொரு பெட்டிகளிலும் ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்பட்டு வருவது வழக்கம்.
தற்போது பெரும்பாலான பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவதாலும், அவர்களுக்கு தேவையான குறிப்புகள் எஸ்எம்எஸ் வசதி மூலம் அனுப்பப்படுவதாலும், ரிசர்வேஷன் பட்டியலை பார்ப்பதில்லை.
இதன் காரணமாக காகித பயன்பாடுகளையும், செலவையும் குறைத்து, ரெயில்வே துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ரெயில் பெட்டிகளில் ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவித்துஉள்ளது.
ஏற்கனவே ஒருசில ரெயில்களில் இது சோதனை முயற்சியாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், வரும் மார்ச் 1ந்தேதி அனைத்து ரெயில்களிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவில் உள்ள ‘ஏ1’, ‘ஏ’ மற்றும் ‘பி’ கிரேடு பெற்ற ரெயில் நிலையங்களில் புறப்படும் மற்றும் அந்த ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களில் முன்பதிவு ‘சார்ட்’ ஒட்டும் நடைமுறை கைவிடப்பட உள்ளதாக, மத்திய ரெயில்வே அமைச்சகம், அனைத்து ரெயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில், சென்னையில் சென்டரில் இருந்து புறப்படும் வெளியூர், வெளி மாநில ரெயில்களிலும் சார்ட் ஒட்டப்படாது என்றும், அதுபோல எழும்பூரில் இருந்து புறப்படும், விரைவு வண்டிகளான நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, மலைக்கோட்டை, குருவாயூர், திருவனந்தபுரம், பல்லவன், நாகர்கோவில், ராமேஸ்வரம் , பாண்டியன், வைகை, பொதிகை, செங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்படாது.
அதுபோல, சென்னை மார்க்கமாக செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ஹம்சபார் எக்ஸ்பிரஸ், ராஜ்தானிஎக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களிம் இனிமேல் சார்ட் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.60 லட்சம் மிச்சமாகும் என்றும் காகிதப் பயன்பாடும் கட்டுப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தில் இந்த முடிவு காரணமாக, முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட், ஆர்.ஏ.சி பயணிகள் தங்களது பயணம் குறித்த இறுதி நிலவரம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.