சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் மோடி, மார்ச்1 மற்றும் 6ந்தேதி என இருமுறை தமிழ்நாடு வருகை தருகிறார்.
மார்ச் 1-ல் மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பாஜக தனது கூட்டணிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், புதிய கூட்டணிக் கட்சிகளை ஈர்ப்பதிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தேமுதிகவை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஏற்கெனவே ஜனவரி மாதம் 23ந்தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதன் மூலம் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கூட்டணியின் தற்போ தையத் தலைவர்களுடன், புதிதாக இணைய உள்ள கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைத் தொடர்ந்து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். பிரதமரின் இந்தப் பயணங்களை ஒருங்கிணைக்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவிலான சிறப்புக் குழுக்களை கட்சித் தலைமை அமைத்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று வழிநடத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், மதுரை பயணத்துக்கு பொறுப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி.பாலகணபதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோல், வேலூர் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]